23 செப்டம்பர் 2012

எனது பயண அனுபவங்கள்-பகுதி-1


                                     அபராதம் செலுத்தினேன்



  இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 2010 ல் முதல் முறையாக புதுடில்லி செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுவரை திருப்பதிக்கு வடக்கே சென்றதில்லை. என் மகளுக்கு தலைநகரில் ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அதனை முடித்துக்கொண்டு, மூன்று நாட்கள் ஊர் சுற்றிப் பார்த்து வர எண்ணி புறப்பட்டோம்.சனிக்கிழமை இரவு நான், என் மனைவி,மகள் மூவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். திங்கள்கிழமை காலை ஒன்பது மணியளவில் புதுடில்லி வந்தடைந்தோம். நண்பர் ஒருவர் ரயிலில் அறிமுக்மானார்.அவரது உதவியுடன் லாட்ஜ் எடுத்து தங்கினோம். மறுநாள் செவ்வாய்க்கிழமை நேர்முகத்தேர்வு நடைபெற்றது. புதன்கிழமை ஜெய்ப்பூர் சென்று வந்தோம்.

             எங்கள் பயணத்திட்டத்தில் டில்லியை சுற்றிப் பார்ப்பதும் ஆக்ரா சென்று தாஜ்மகாலைப் பார்த்து வருவதும் முக்கியமாக வைத்திருந்தோம். வெள்ளிக்கிழமை ஆக்ரா சென்றுவிட்டு அங்கிருந்து சென்னை வர ஜீ.டி.எக்ஸ்பிரஸ்ஸில் முன்பதிவு செய்திருந்தோம்.

    வெள்ளிக்கிழமைகளில், தாஜ்மகாலுக்கு சென்று பார்க்க அனுமதி இல்லை, அன்று விடுமுறை நாள் என்பது டில்லி சென்ற பிறகுதான் தெரிந்தது, எனவே பயணத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்ய நேர்ந்தது.வியாழக்கிழமை அன்றே ஆக்ரா சென்று வந்து விட்டோம்.(ஆக்ரா அனுபவங்களை பிறகு பார்க்கலாம்).


        வெள்ளிக்கிழமை டில்லியின் முக்கியமான் இடங்களில் சிலவற்றைப் பார்த்துவிட்டு சரியாக மாலை ஆறு மணிக்குப் புறப்படும் ஜீ.டி.எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வந்து சேர்ந்தோம்.ஆக்ராவிலிருந்து சென்னை வருவதற்கு மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், டில்லியிலிருந்து ஆக்ராவிற்கு ( சுமார் 200 கிலோமீட்டர் தூரம்) வர முன்பதிவு செய்யாத டிக்கட் மூன்று பேருக்கும் வாங்கினோம். டில்லியில் எங்களுக்கு பல உதவிகள் செய்த ஓட்டல் தமிழ்நாடு நண்பர் (திருநெல்வேலியை சேர்ந்தவர்) சொல்லியதன்பேரில், எங்களுக்கான முன்பதிவு பெட்டியில் ஏறினோம்.எங்கள் இருக்கையைக் கண்டுபிடித்து சென்று பார்த்தால் அங்கே ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தனர். விசாரித்ததில் அவர்கள் டில்லியிலிருந்து ஆக்ரா செல்ல முன்பதிவு செய்து  வருவது தெரிந்தது.அவர்களிடம் எங்கள் பயண விவரத்தை சொல்லி எங்களுடைய பொருட்களை அங்கேயே வைத்துக்கொண்டோம். அவர்களுடைய தயவில் இருக்கைகளைப் பகிர்ந்து கொண்டோம்.

         சுமார் மூன்று மணி நேர பயணத்தில் ஆக்ரா நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆக்ரா வருவதற்கு சற்று முன்னர் டிக்கட் பரிசோதகர் வந்தார்.எங்களுடைய டிக்கட்டுகளையும் பரிசோதித்தார். முன்பதிவு செய்த டிக்கட்டுகளையும், முன்பதிவு செய்யாத டில்லி ரயில் நிலையத்தில் வாங்கிய டிக்கட்டுகளையும் அவரிடம் கொடுத்தேன்.பார்த்துவிட்டு ரூபாய் 265 அபராதம் கட்டச்சொன்னார்.ரசீதை போட்டுக் கொடுத்து விட்டார்.வேறு வழியின்றி அபராதம் கட்டினேன்.

         உடன் வ்ந்த நண்பர்கள் அப்போது சொன்னதுதான் மிகவும் ஹைலைட்."இதுவே ஒரு உ.பி.வாலாவாக இருந்தால் அபராதம் வாங்கிவிட முடியுமா? " அப்போதுதான் உறைத்தது தமிழர்கள் நாம் எவ்வளவு இளிச்சவாயர்களாக இருக்கிறோம் என்பது. வட இந்தியர்கள் பெரும்பாலோர் ரயிலில் பயணம் செய்ய பயண்ச் சீட்டே வாங்குவதில்லை.ரயிலில் கூறைமீது ஏறி பிரயாணம் செய்வது மிகச் சாதாரணம்.ஆயிரக்கணக்கில் ரயிலில் தொற்றிக்கொண்டு செல்கிறார்கள்.சாதாரண பயணச்சீட்டு வாங்கிவிட்டு, முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிவிடுகிறார்கள்.(என்னைப்போல).ஆனால் அபராதம் எல்லாம் கட்டமாட்டார்கள்.அவர்களிடம் அப்ராதம் எல்லாம் வாங்கிவிட முடியாது என்பதே நிதர்சனம்.

             நான்கூட டிக்கட் பரிசோத்கரிடம் ஏதாவது விவாதம் செய்யலாம் என்றால், ஹிந்தியில் பேசத்  தெரியாது. வடநாட்டவர்கள் ஹிந்தி தவிர வேறு மொழி தெரிந்தாலும், காட்டிக்கொள்ளமாட்டார்கள்.ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள்.டிக்கட் பரிசோதகரும் வட மாநிலத்தவரே.
            
               முன்பதிவு செய்தபோது சென்னைக்கும் -டில்லிக்கும் வாங்கிய டிக்கட்டைவிட சென்னைக்கும   ஆக்ராவிற்கும் வாங்கிய டிக்கட் ரூபாய் விலை 16 மட்டுமே குறைவு. மூன்று பேருக்கும் சேர்த்து 48 ரூபாய் மட்டுமே குறைவாக் இருந்தது.ஆனால் டில்லியில் நாங்கள் வாங்கிய  சாதாரண டிக்கட் மற்றும் அபராதம் எல்லாம் சேர்த்து 500 ஆகிவிட்டது. முன்பதிவு இல்லாத பெட்டியில் ஆக்ராவரை வந்திருந்தால், அபராதம் கட்டவேண்டி வந்திருக்காது.ஆனால், ஆக்ரா வந்து சேர்ந்தபின்னர் அவசரம் அவசரமாக பெட்டி மாறவேண்டும்.இடம் தான் காலியாக உள்ளதே என்று வேறு யாராவது நம் இடத்தில் அமர்ந்திருந்தால்(வட இந்திய ரயில்களில் சர்வ சாதாரணமாக நடக்கிற நிகழ்வு), அவர்களுடன் மல்லுக்கு நிற்கவேண்டும்(மொழி தெரியாமல்), இதையெல்லாம் யோசித்தே ஹோட்டல் நண்பர் சொன்னதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.விளைவு அபராதம் கட்டியதுதான்.

             அதுவரை ஒரு தொலைபேசி கட்டணமோ, மின்சார கட்டணமோ அபராதத்துடன் கட்டியிராத நான் முதல் முறையாக் அபராதம் கட்டியது முகவும் மன உளைச்சலாக இருந்தது. பயணம் முடிந்து வந்த பின்னரும் சில நாட்களுக்கு அதே நினைவாக இருந்தேன்,அதனால்தான் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட அந்த நிகழ்வை இங்கே பதிய முடிகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

2 கருத்துகள்: