26 பிப்ரவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்----பகுதி 3




 
பிழையின்றித் தமிழில் எழுதுவோம்-பேசுவோம்
தமிழில் பிழை அதிகம் நேரும் இடங்கள்:
1.உருவப் பிழை: விரைவாக எழுதும்போது ஏற்படுவது
2.ஒலிப் பிழை: பேசும்போது ஏற்படுவது
3.எழுத்துநிலைப் பிழை: தேவையின்றி,ஒலி உச்சரிப்பை         மனத்தில் கொண்டு செவியுணருமாறு எழுதுகையில் ஏற்படுவது.அதாவது உச்சரிப்பது போலவே எழுதுவதும், வடமொழியில் உள்ளவற்றைத் தமிழில் எழுதுவதும் ஆகிய இரு வகைகளில் இத்தகைய பிழைகள் அடங்கும்.இப்படிப்பட்ட பிழைகளைக் கீழே காண்போம்.
ற்க்கண்டு இங்கே விற்க்கப்படும்.
ட்க்குடியன் குடித்துவிட்டுப் புல்த்தரையில் புரண்டான்.
மேற்க்காணும் அரசு ஆணை தவறானது.
ண்க்காட்சி நடைபெறும்.
மேலே உள்ளவற்றில் இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்துள்ளன.தமிழில் இவ்வாறு இரண்டு மெய்யெழுத்துகள் (ய,ர,ழ நீங்கலாக) இணைந்து வாரா.எனவே மேலே கண்ட வாக்கியங்கள் பிழையாகும்.
ய,ர,ழ ஆகிய மூன்று எழுத்துகளை நிலைமொழியாகக் கொண்டு வருமொழி புணரும்போது இருமெய்கள் இணைந்து வரும் சான்று.
       வேய்ங்குழல்,  ஆர்க்காடு ,யாழ்ப்பாணம்
  என வருமிடங்களில் இரு மெய்யெழுத்துகள் இணைந்து வருகின்றன.இவை சரியாகும்.
வடமொழியில் காமாஷி, மீனாஷி  என எழுதுவது பிழையாகும். காமாட்சி, மீனாட்சி ஆகியவையே சரியாகும்.
4.வழக்குப் பிழை: பேச்சு வழக்கு ,பெரும்பாலும் எழுத்திலும் அப்படியே ஏற்படுவது.
பேச்சு வழக்கு                எழுத வேண்டிய முறை
அடமானம்                   அடைமானம்
உத்திரவு                     உத்தரவு
என்னமோ                   என்னவோ
சிகப்பு                       சிவப்பு
நஞ்சை                       நன்செய்
இவை போல்வன நூற்றுக்கணக்கில் உள்ளன.                     
5.ஒற்றுப் பிழை: வல்லெழுத்துக்கள்,நிலைமொழி+வருமொழி புணரும்போது ஏற்படுவது.சொற்களுக்கிடையில் வல்லின எழுத்துத் தோன்றுவதும் தோன்றாமையும் முறையே வல்லெழுத்து மிகுதல், மிகாமை எனக் கூறப்பெறும் ஒற்றுப் பிழை  எற்படுதற்கு, க, ச, த, ப ஆகிய நான்கு வல்லின எழுத்துகள் காரணமாகின்றன.
வல்லெழுத்து மிகுமிடங்கள்:
1.நிலைமொழி ஈற்றில் நிற்கும் உயிரின் முன் க,ச, த, ப ஆகிய வல்லெழுத்துகள் மிகும்
(எ.கா) குட்டிப்பையன், கோழிக்கறி
2.வினையெச்சத் தொடரில் மிகும்.
(எ.கா) ஓடிச்சென்றான், தேடிப்பார்
3.பண்புத் தொகையில் மிகும்
(எ.கா) மாசித்திங்கள், பாசிக்கரை
4.இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்
(எ.கா) அவனைக்கண்டேன், இராமனைத்தேடிய சீதை
5.மூன்றாம் வேற்றுமை மிகும்
(எ.கா) அவனுக்குக் கொடு, பாட்டுக்குக் கூத்து
6.உவமைத்தொகையில் மிகும்
(எ.கா) கிளிப்பேச்சு, மலர்க்கை
7.வன்றொடர்க் குற்றியலுகரத்தில் மிகும்
(எ.கா) ஆற்றுப்பக்கம், சோற்றுக்கூட்டம்
8.மென்றொடர்க் குற்றியலுகரத்தில் மிகும்
(எ.கா) நஞ்சுப்பார்வை, அன்புக்கரங்கள்
9.ய,ர,ழ எழுத்து நிலைமொழியில் இருப்பின் மிகும்
(எ.கா) வாய்ப்பேச்சு, ஆர்க்காடு, யாழ்ப்பாணம்
10.ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகும்
(எ.கா) பாடாப்பைங்கிளி, தேடாச்செல்வம்
11.சுட்டுவினாப் பெயர்களில் மிகும்
(எ.கா)அங்குக் கண்டாய், இங்குப் பெற்றாய்,எங்குப் போனாய்?
12.மற்ற,மற்று,மற்றை என்ற இடைச் சொற்களில் மிகும்
(எ.கா) மற்றக் குழந்தைகள், மற்றுச் சொல்,மற்றைப் பையன்
13.ஆக, போய், ஆய் என்ற வினையெச்சச் சொற்களுக்குப் பின் மிகும்
(எ.கா) நன்றாகப் பாடு, போய்ச் சொல், நல்லதாய்ப் போயிற்று
வலிமிகா இடங்கள்:
1.எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகாது
(எ.கா) தாக்காத கணைகள். விடியாத பார்வை
2.உம்மைத் தொகையில் மிகாது
(எ.கா) கொய்து தின்றான், வந்து பார்த்தான், மென்று சுவைத்தான்
3.வினைத் தொகையில் மிகாது
(எ.கா)திரைகடல்,அலைகடல், வளர்பிறை
4.அத்தனை,இத்தனை,எத்தனை என்ற தொகுதிச் சொற்கள் வருமிடத்து மிகாது
(எ.கா) எத்தனை பறவைகள், அத்தனை பார்வை
5.படி என்ற இடைச் சொல்லின் பின் மிகாது.
(எ.கா) வரும்படி பேசு, கேட்கும்படி சொல்.
6.எவ்வளவு என்ற அளவைச் சொல் பின் மிகாது.
(எ.கா) எவ்வளவு தடை, எவ்வளவு பணம்
7.மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகாது.
(எ.கா) அரும்பு சூடு, குரங்கு தின்றது.
8.ஓடு, ஒடு என்ற மூன்றாம் வேற்றுமையின்கண் மிகாது.
(எ.கா) அவனோடு செல், அவனொடு போராடு
9. உயர்திணைப் பொதுச் சொற்களின் ஈற்றில் ‘ர’ ஒற்றுக்குப்பின் வருமிடங்களில் மிகாது
(எ.கா) மகளிர் குழு, தமிழர் பண்பாடு, ஆடவர் கழகம்

6.அறியாப் பிழை: இலக்கணம் அறிந்திருந்தும்கூட நம்மில் எத்தனைப் பேர் தவறில்லாமல் எழுதுகிறோம்? எப்படியாவது எங்காவது தவறு நேர்ந்து விடுகிறதே! நாம் அறியாமல் செய்யும் பிழையே அறியாப் பிழை ஆகும்.
(எ.கா)
பிழை                      சரி
அருகாமையில்              அருகில்
முயற்சித்தான்               முயன்றான்
பேச்சுவார்த்தை நடந்தது      பேச்சுவார்த்தை நிகழ்ந்தது
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்---தமிழ் நாட்டுப் பாடநூல்
                           நிறுவனம்

7.பொதுப்பிழை: ஒரு, ஓர் என்பதிலும், ஒருமை, பன்மை ஆகிய இடங்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில், தான், தாம் ஆகிய இடங்களில் எற்படுகிற பிழைகளைப் பொதுப் பிழைகளாகக் கருதலாம்.
ஒரு/ஓர்
வருமொழியில் உயிர் எழுத்து வருமானால் ஓர் என வரவேண்டும்.(எ.கா) ஓர் அலகு, ஓர் அளவு, ஓரிலக்கு
வருமொழியில் மெய்யெழுத்து வரின் ‘ஒரு’ இட்டு எழுத வேண்டும்.(எ.கா) ஒரு பறவை, ஒரு மரம்
ஒருமை, பன்மை (எ.கா)
அரசு ஒன்று கூடிக் கலந்து பேசின------   பிழை
அரசு ஒன்று கூடிக் கலந்து பேசியது------- சரி
கன்றுகள் வந்த வண்ணம் உள்ளது---------- பிழை
கன்றுகள் வந்த வண்ணம் உள்ளன.----------சரி
நிகழ்ச்சிகள் தொடங்கியது-----------------------பிழை
நிகழ்ச்சிகள் தொடங்கின--------------------------சரி
மேய்வன ஆடுகள் அன்று---------------------பிழை
மேய்வன ஆடுகள் அல்ல----------------------சரி
தன்மை, முன்னிலை, படர்க்கையில் அல்ல என்ற எதிமறைச் சொல்லைப் பயன்படுத்தும்போது நான் அல்ல, நீ அல்ல, அவன் அல்ல எனக் கூறுதல் பிழை. நான் அல்லேன், நீ அல்லை, அவன் அல்லன் என எழுதவேண்டும்.

------------------------------நன்றி ----------------------
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!